அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மதுரையில் கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார்.மேலும் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி உள்ளார். இந்த வழக்கில் கடந்த 2019 மார்ச் 21ஆம் தேதி அட்டாக் பாண்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியது. அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு உடல் நல பாதிப்பால் அறுவைச் சிகிச்சை செய்ய போகிறார். அறுவைச் சிகிச்சையின் போது உடனிருந்து கவனிக்க கணவருக்கு பரோல் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரோல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.ஆனால் அட்டாக் பாண்டியை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு 5 மணி நேரத்திற்கு முன் மற்றும் சிகிச்சை முடிந்து சில மணி நேரம் மட்டும் கணவரை சந்திக்க அனுமதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts