இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலைதூக்கியுள்ளது. ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன், கமல் ஹாசன் தனது கட்சிப் பெயரையும் (மக்கள் நீதி மய்யம்), கொடியையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டார். மேலும், மாவட்டந்தோறும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எதிலும் பொறுமையாக இருக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மேலும், ரஜினி ரசிகர் மன்றம் என்பதனை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார். அதோடு, படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து, காலா, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று ரொம்பவே பிஸியாகிவிட்டார்.
இதற்கிடையில், ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தித்தொடர்பாளர், மற்றும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக, ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பத்திரிக்கையாளர் கோசல்ராம் ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் என்று சிலர் வதந்தியை பரப்பி வருவதாக மன்றத்திற்கு தகவல் வந்துள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் என்றோ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்கள் என்றோ இது நாள் வரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.