பிரதமர் வேட்பாளரை பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

ஆட்சி மன்றக்குழு முடிவு: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். இது விஷயத்தில் முடிவெடுக்க அக்குழுவுக்குதான் முழு அதிகாரம் உள்ளது.

அங்கு எடுக்கப்படும் முடிவு கூட்டணியில் பிரச்னை ஏற்படும் வகையில் இருக்காது. இதனை நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மோடி பிரதமர் வேட்பாளராக நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதலி கூறாமல் ராஜ்நாத் சிங் தவிர்த்தார்.

பிரபலமான தலைவர் மோடி: அதே நேரத்தில், “”இப்போது நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர் யார் என்றால் அது நரேந்திர மோடிதான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாஜக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். இதனை யாரும் மறுக்க முடியாது” என்று ராஜ்நாத் கூறினார்.

தேர்தலுக்குப் பின் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால், அப்போதும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரை கூட்டணி கட்சிகள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, இது கற்பனையான கேள்வி. இப்போது கூட்டணியில் உள்ள எந்த கட்சியின் உறவையும் பாஜக முறித்துக் கொள்ளாது என்றார்.

ராகுலுக்கு பதிலடி: காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முன்னிறுத்தப்படும் சூழ்நிலையில், அவருக்கு தகுந்த பதிலடி கொடுக்க மோடிதான் பொருத்தமான நபர் என்று பாஜகவில் பலரும் நினைப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அப்படி இருக்கும்போது மோடியை ஏன் முன்னிறுத்தக் கூடாது என்ற கேள்விக்கு, “”மக்களவைத் தேர்தல் என்பது நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான போட்டி அல்ல.

மேலும் காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று எப்படிக் கூற முடியும்” என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய ஜனதா தள பிரச்னை: பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டுமென்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது தொடர்பாகவும் ராஜ்நாத் சிங்கிடம் கேட்கப்பட்டது. அப்போது, கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளத்தில் தேசிய செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.

பாஜக மதச்சார்பற்றது: மோடி தன்னைத்தானே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வருகிறார் என்று கூறப்படுவதையும், அவர் மதச்சார்பற்றவர் அல்ல என்ற குற்றச்சாட்டையும் மறுத்துப் பேசிய ராஜ்நாத் சிங், “பாஜக ஒரு மதச்சார்பற்ற கட்சி. அக்கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் மதச்சார்பற்றவர்தான்.

நான் மோடியிடம் பலமுறை பேசியுள்ளேன். ஒருமுறை கூட தன்னை பிரதமர் வேட்பாளராக அவர் தன்னை முன்னிறுத்தியது இல்லை.

குஜராத் கலவரத்துக்கு மன்னிப்பு? குஜராத் கலவர வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே, மோடிதான் அந்த கலவரத்தை தூண்டினார், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்று கற்பனை செய்து கூறுவது தவறு.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜவாதி கட்சிகள் ஆண்ட மாநிலங்களிலும் மதக்கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு ஆட்சியில் இருந்த முதல்வர்தான் அதற்கு காரணம் என்று யாரும் கூறவில்லை. ஆனால் மோடி மீது மட்டும் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. குஜராத் கலவரம் துரதிருஷ்டவசமானது என்று பலமுறை கூறியுள்ளேன். ஆனால் அதற்காக மோடி மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்றார் ராஜ்நாத் சிங்.

Related posts