அரசு ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல்துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என நிரூபணம் ஆனதால், வேல்துரை தானே முன்வந்து பெற்ற ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஊதியமாக பெற்ற 21.58 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வேல்துரை.
அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டதால், வேல்துரை வெற்றி செல்லாதது என தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக வேல்துரை பெற்ற ஊதியம் 21லட்சத்து 58 ஆயிரம் ரூபாயையும், 201 நாள் சட்டமன்ற பணியில் பங்கேற்றதற்கு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தும் சட்டமன்ற செயலாளர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து வேல்துரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். விசாரணையின் போது, அரசு ஊழியர் ஏதேனும் குற்றம் புரிந்து பணியிலிருந்து நீக்கப்பட்டால், அதுவரை அவர் பெற்ற சம்பளம் திரும்பி பெறப்பட மாட்டாது.

அதேபோல், அரசு ஊழியர் என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்னிடம் ஊதியத்தை திருப்பி செலுத்தக் கோர முடியாது என வேல்துரை தரப்பில் வாதிடப்பட்டது.

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை இழந்துவிட்ட மனுதாரர், ஐந்து ஆண்டுகள் பெற்ற ஊதியத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களுடன், மனுதாரர் தன்னை ஒப்பிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாழ்வாதாரத்துக்காக சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியரையும், மக்களுக்கு சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வையும் ஒரே மாதிரியாக கருத முடியாது என தெளிவுபடுத்தினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல்துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே செல்லாது என நிரூபிக்கப்பட்டு விட்டதால், வேல்துரை தானாக முன்வந்து ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, நான்கு வாரங்களில் ஊதிய தொகை 21.58 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts