மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட… கொரோனா தொற்று ஆபத்து தொடருமா ?
சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தளர்வு அறிவிப்புகளை அடுத்து சிறுவர் சிறுமிகள் கூட்டமாக வெளியே வந்து விளையாட ஆரம்பித்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்த தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் இணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர், ”தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள். உங்களுக்காக இரவு, பகலும் பணியாற்றி வரும் சுகாதாரத்துறையினருக்கு இது மிகவும் கடினமாக அமைந்துவிடும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் பூக்கடை உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவருக்கு கடந்த ஜூலை மாதத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. மேலும் சில போலீசாருக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வெளிய இடங்களில் மற்றும் பொது இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து இருந்தார். இந்த விதிமுறைகளை கட்டாயம் பொது மக்கள் கடைபிடிக்க போலீசார் வலியுறுத்த வேண்டும் என்று சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாஸ்க் அணியாத வகையில் 930 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் மாஸ்க்கை சரியாக அணியாமல் கீழே இறக்கிவிட்டுச் செல்கின்றனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து சரியாக அணிந்து செல்லுமாறு வலியுறுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியும் தொடர்ந்து மாஸ்க் அணியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், வேலை இடங்கள், கட்டிட வேலைகள் நடக்கும் இடங்கள், முதியோர் இல்லம் ஆகியவற்றிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், செப்டம்பர் மத்தியில் அல்லது அக்டோபர் மாதம் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அதிகரிக்கலாம் என்று தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுவரை ஏழை தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நடுத்தர வர்க்கத்தினர் வெளியே வர துவங்கி இருப்பதால், இவர்கள் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே வரும் நாட்களில் தனியார் மருத்துவமனைக்கும் தேவை அதிகரிக்கும். எனவே மக்கள் எச்காரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.