சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செப். 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறையின் முக்கிய வருவாய் இனங்களான சொத்துவரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உட்பட வரி வருவாய் இனங்கள், வரி வருவாய் அல்லாத இனங்கள் / கட்டணங்கள் சென்ற நிதி (2019-20) ஆண்டின் 31மார்ச்2020க்குள் சொத்து உரிமையாளர்கள்/நிறுவனதாரர்களால் சட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி வரிவருவாய் இனங்களை வசூலிக்க இயலாத சூழ்நிலையில், செலுத்த வேண்டிய வரிவருவாய் இனங்களை (தொழில்வரி, தொழில் உரிமம் உட்பட), எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் செலுத்த ஏதுவாக காலக்கெடு 30.ஜூன் 2020 வரை ஒத்திவைக்க அரசால் ஆணையிடப்பட்டது.
இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி (தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு) எந்த வித அபராதம் மற்றும் (பெனால்டி) தண்டத்தொகையின்றி 30.செப்டம்பர்.2020 க்குள் செலுத்தலாம் என்று ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.