சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறி மு.க.ஸ்டாலின் பேசினார்.இதனால் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது .இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் . ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு,இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் அதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இப்போது மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில் தெரிவித்தது என்னவென்றால் கொடநாடு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எதுவும் பேசக் கூடாது என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்திரவிட்டார் . ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.