அரசு உதவிபெறும் பள்ளிக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ரத்து செய்த விவகாரத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் கட்டடத்துக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உரிமம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள வணிக ரீதியான கட்டடங்களை அப்புறப்படுத்தவும், தீயணைப்பு தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு குறித்து தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
News in English