கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்

கர்ப்பிணி பெண் உஷா

திருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா மரண சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் இருக்கும் சூலமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் திரு.ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 36). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை பரிசோதனைக்காக திருச்சியில் இருக்கும் ஓர் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவர்கள் இரவு சுமார் 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் வந்தார்கள். அப்பொழுது அங்கே பணியில் இருந்த போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் காமராஜ் திரு.ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டார். அதற்க்கு அவர், ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் தலைக்கவசம் அணியவில்லை என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

ஆனால் அவரை மற்றொரு காவல் அதிகாரியுடன் துரத்தி சென்ற போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகில் திரு ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய திரு.ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே சாய்ந்தார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதில் உஷாவுக்கு வயிற்றில் பலத்த காயம் உண்டானது. அத்துடன் உதிரப்போக்கு அதிகமாகி நடுரோட்டில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக ராஜா மற்றும் உஷாவை 108 ஆம்புலன்சு மூலம் துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். எனினும் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.

அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஆயிரகணக்கானவர்கள் கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.

எனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தடியடியில் 50-க்கும் மேற்பட்டோர் மண்டை உடைந்து காயம் அடைந்தனர். மேலும் போலீஸ் ஜீப் உள்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் பிடித்து சென்றனர். 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த போராட்டம் பின்னர் சிறிது சிறிதாக விலக்கி கொள்ளப்பட்டது.

இதற்கிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவெறும்பூரில் பெண் உஷா உயிரிழப்பு சம்பவம் பற்றி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அப்போது கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல். திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என்று கூறியுள்ளார்.

Visit : http://www.lawyerchennai.com to consult a criminal lawyer in Chennai.

Related posts