ஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிவாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறி , சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.சுற்றறிக்கையின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts