நாகப்பட்டனம்: தாய் பாசத்தால் தற்கொலை செய்து கொண்ட காவலர் .நாகை மாவட்டத்தில் உள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). மாமணி மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் கோர்ட் வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்துள்ளார். அவர் குடும்பத்தில் மனைவி வளர்மதி , மாமதி என்ற 12 வயது மகளும், சுவைமணி என்ற 9 வயது மகனும் உள்ளனர்.
மாமணியுடன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் சரோஜினி வசித்து வந்தனர். மாமணியின் தாய் சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லை . கடந்த வாரம் அவரது தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்ஸ்பெக்டரிடம் மாமணி தொலைபேசி மூலம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விடுமுறை மறுத்ததாக கூறப்படுகிறது .
மனமுடைந்த மாமணி 6 நாள் விடுமுறை கோரிய கடிதத்தை எழுதி காவல் நிலையத்தில் வைத்து விட்டு தனது ஊருக்கு தாயை கவனிக்க சென்று விட்டார்.. பிறகு மீண்டும் பணிக்கு செல்ல காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது விடுமுறை கோரிக்கை பற்றி விசாரித்த போது, மறுக்கப்பட்டதை சக காவலர் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மாமணி வீட்டிலேயே விஷம் அருந்தினார் . இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சிகிச்சைக்காக அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.