அருஞ்சுனை காத்த அய்யனார் – கழுகாசலமூர்த்தி கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

TutTemple050414

திருச்செந்தூர்,

குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், கழுகுமலை கழுகாசலமூர்த்தி சுவாமி, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலப்புதுக்குடி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெறும்.

சுவாமி வீதி உலா

விழாவின் நிறைவு நாளான வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு உத்திர கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவார்கள். வணிக நிறுவன உரிமையாளர்கள், வியாபாரிகள் கோவில் வளாகத்தில் அமர்ந்து தங்களது தொழிலின் புதுவருட கணக்கை எழுதி தொடங்குவார்கள்.

இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சுவாமி கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி மேல புதுக்குடி கிராமத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஏற்பாடுகளை கிராம விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

கழுகுமலை

கழுகுமலை கழுகாசலமூர்த்தி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தர்ப்பை புற்களால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

9-ம் திருநாளான 12-ந்தேதி (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. கோ ரதத்தில் சண்டிகேசுவரரும், சட்ட ரதத்தில் விநாயக பெருமானும், வைர தேரில் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகளின் வழியாக தேரோட்டம் நடக்கிறது.

திருக்கல்யாணம்

10-ம் திருநாளான 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தபசு காட்சி நடக்கிறது. 11-ம் திருநாளான 14-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தெற்கு வாசல் மண்டபத்தில் சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 12-ம் திருநாளாள 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் தந்த பல்லக்கில் பட்டின பிரவேசம் நடக்கிறது.

13-ம் திருநாளான 16-ந்தேதி (புதன்கிழமை) இரவில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இரா.தமிழ் ஆனந்தன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

ஆழ்வார்திருநகரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நேற்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

தேரோட்டம்

5-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருநாளான வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.

ஏற்பாடுகளை விழா உபயதாரரும், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபை தலைவருமான டி.எஸ்.பெரிய திருவடி, கோவில் நிர்வாக அதிகாரி க.சிவகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related posts