ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

Twins-child-in-chennai-owl-17

உலகில் பிறக்கும் 2 லட்சம் குழந்தைகளில் ஒன்று என்ற விகிதத்தில்தான் உடற்பாகங்கள் ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆண்களில் இத்தகைய இரட்டையர்கள் காணப்படுவது மிகவும் அரிது. இதுவரை உலக அளவில் இடுப்புக்குக் கீழ் ஒட்டிப் பிறந்த நிலையில் 30 ஜோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாக சம்பந்தப்பட்ட சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த வகை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான்ஸானியா நாட்டை சேர்ந்த 9 மாதமே ஆன எரிகா மற்றும் எல்யூடி என்ற இடுப்புக்கு கீழே ஒட்டிப் பிறந்த ஆண் குழந்தைகள் சிகிச்சைக்காக கடந்த ஜூன் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த குழந்தைகளின் முதுகு தண்டு வடத்தின் கீழ் பகுதி மற்றும் சிறுநீர் பாதை மற்றும் ஆண் உறுப்பு, மலம் செல்லும் பாதை ஆகியவை ஒட்டியே இருந்தது. இதனால் குழந்தைகளை பராமரிக்க பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து ஆபரேஷன் செய்து குழந்தைகளை தனித்தனியாக பிரிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரிக்கும் ஆபரேஷன் நேற்று காலை 9 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கியது. சிறுநீரக அறுவை சிகிச்சை துறை டாக்டர் வெங்கட் ஸ்ரீபதி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஷினி ஆகியோர் தலைமையில் சுமார் 25 டாக்டர்கள் ஆபரேஷன் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் ஆபரேஷன் மூலம் முதுகு தண்டுவடத்தின் கீழ்பக்கத்தில் இருந்து ஒன்றோடு ஒன்று ஒட்டியுள்ள பகுதி முதலில் பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்த மலம் கழிக்கும் பாதைகளை டாக்டர்கள் பிரித்தனர். பின்னர் ஆண் உறுப்பு மற்றும் சிறுநீர் செல்லும் பாதை உள்ளிட்ட இணைந்த பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக டாக்டர்கள் பிரித்தனர்.

கடைசியாக ஆபரேஷனுக்காக வெட்டிய இடங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்யப்பட்டது. குழந்தைகளை பிரிக்கும் ஆபரேஷன் இன்று அதிகாலை 1 மணி வரை நடைபெற்றது.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிட்ட ஸ்டேட்மெண்டில், “காலை 9 மணிக்கு தொடங்கிய ஆபரேஷன் சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியமாக உள்ளன. குழந்தைகளின் உடல் வெப்பம், இதய துடிப்பு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சரியாக இயங்கி வருகிறது. ஆனாலும் குழந்தைகள் இரண்டும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறபட்டுள்ளது.

மேலும் இந்தக் குழந்தைகள், பிரிக்கப்பட்ட ஆறாவது மாதத்தில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்போது மற்றவர்களைப் போன்று இந்தக் குழந்தைகள் வளர்ந்து தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுபட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts