இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்

தர்மபுரி மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் உயிரிழந்த இளவரசன் மரணம் தொடர்பான தகவல்களை மனித உரிமைக் கழகமானது புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

விவசாய விடுதலை முன்னணி அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு தகவலில், இளவரசன் உடலானது ரயில் தண்டவாளம் அருகே கிடந்துள்ளதால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஒரு ரயிலின் முன்பு ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை பார்த்து வந்த கவுடு என்னும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கின்றார். மேலும் 3ம் திகதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இளவரசன் தருமபுரியில் தான் இருந்திருக்கின்றார். அன்று நத்தம் காலனி இளைஞர்களுடன் வழக்கம் போலவே கலகலப்பாக பழகியிருக்கின்றார். மறுநாள் காலை 4ம் திகதி 7 மணிக்கு அருகில் உள்ள மலையப்பன் நகருக்குச் சென்று அங்கே உள்ள தனது மாமா முருகனை இளவரசன் சந்தித்து அவரிடம் தினத்தந்தியில் திவ்யா கூறிய செய்தியினை காண்பித்து புலம்பிருக்கின்றார். இனி தனக்கு கிடைக்க இருக்கும் பொலிஸ் வேலைக்கு செல்வதாகவும், திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தன்னுடைய பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால் அந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பின்பு தனக்கு பொலிஸ் வேலை கிடைப்பது உறுதி எனவும் கூறியுள்ளார். அது வரை ஆந்திரா சித்தூருக்கு நண்பர்களுடன் சென்று வேலை பார்க்கப் போவதாக இளவரசன் தன் மாமாவிடம் கூறியிருக்கின்றார். பின்பு மாமாவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தித்து, அவரிடம் இருக்கும் பல்சர் வண்டியினை வாங்கிக் கொண்டு தர்மபுரி நகரப்பகுதியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையினை பார்க்க சென்றிருக்கின்றார் இளவரசன்.

அங்கு அத்தையை சந்தித்து அன்றிரவு அத்தை வீட்டில் தங்கிவிட்டு பின்பு மறு நாள் காலையில் தர்மபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி நகரப்பகுதியில் இருக்கும் ஒரு நண்பனை பார்க்கச் செல்வதாக கூறியிருக்கின்றார். பின்பு வண்ணாம்பட்டியில் உள்ள நண்பனை பார்க்க சென்றிருக்கின்றார். இந்த நண்பர் வன்னியர் சாதியினை சேர்ந்தவர். அன்று மதியம் இளவரசனின் தந்தைக்கு அவருக்கு தெரிந்த பொலிஸ் பழனியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் தண்டவாளம் அருகே பல்சர் வண்டி நிற்பதாக கூறியிருக்கின்றார் அந்த பொலிஸ்காரர். அங்கு சென்ற பின்புதான் அவருக்கு தனது மகன் இறந்து கிடப்பது தெரிந்துள்ளது. மேலும் இளவரசன் ரயிலில் பாய்ந்து அடிபட்டதற்கான பெரிய காயங்கள் அவரது உடலில் இல்லை. இடது கையில் ஒரு வெட்டுக் காயமும், தலை பிளந்தது போன்ற காயமும் இருந்தது மேலும் மூளை சிதறி இருந்தது. அவரது உடல் அருகே வாழைப்பழத் தோல் மற்றும் திறக்கப்படாத ஒரு மது பாட்டிலும் இருந்துள்ளது. அவரிடம் இருந்த பையில் 2011ல் அவர்களுக்கிடையே பறிமாறப்பட்ட காதல் கடிதங்கள் இருந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து இளவரசன் தந்தையிடம் பேசிய போது இது தற்கொலை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மேலும் ஊர் மக்களுடைய கருத்தும் அதுவேதான். ஏனெனில் தனக்கு எப்படியும் பொலிஸ் வேலை கிடைக்கும். வேலை கிடைத்ததும் திவ்யா திரும்பவும் தன்னிடம் வருவாள் என்று தான் பலரிடம் அவர் கூறியிருக்கின்றார். இந்த பிரச்சனைகள் நடக்கும் பொழுது அவரே தனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று இளவரசனின் தந்தை இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்து மனித உரிமை கழகம் தனது குழுவினருடன் இணைந்து புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

Related posts