தமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்

Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government
2013வியாழன் 23

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள். அந்த யுத்தத்தில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அஞ்சலி கூட்டம் நடத்துவது இந்த நாளில் தான். இந்தநாளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் என அவரவர்களின் வலிமைக்கேற்ப அரசியல் கட்சிகளும், ஈழ ஆதரவு அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளாக நினைவேந்தல் கூட்டங்களை எழுச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழகத்தில் நடத்தின. இந்த ஆண்டும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17-ந் தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பிரபாகரன் படம் இல்லாமல் அந்த மேடை காட்சி தந்தது. தடையை மீறி நடத்தினாலும் பிரபாகரன் படம் இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கூட்டத்தையோ அஞ்சலிக் கூட்டத்தையோ நடத்தமாட்டார் வைகோ. அப்படிப்பட்டவர் கூட்டத்திற்கு தடை எதுவும் இல்லாத நிலையில் பிரபாகரன் படம் இல்லாமல் கூட்டம் நடத்துகிறார் என்றால், ஒருவேளை பிரபாகரன் படத்தை வைகோ கைவிட்டு விட்டாரா? என்கிற சந்தேகம் கூட்டத்தில் கலந்துகொண்ட உணர்வாளர்களிடம் எதிரொலித்தது. இந்தநிலையில், இதே தாணா தெருவில் 18-ந் தேதி கூட்டம் வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அனுமதி மறுத்ததால் பெரியார் திடலில் உணர்வுபூர்வமாக நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவையும் -வீழ்வோம் என நினைத்தாயோ என்ற தமிழின எழுச்சிப் பொதுக் கூட்டத்தையும் அதற்கான பேரணியையும் கடலூரில் நடத்த திட்டமிட்டார் சீமான். இதற்கான அனுமதியை காவல்துறையினரிடம் கேட்டிருந்தார் கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன். ஆனால், இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் 15-ந் தேதி கூட்டத்திற்கும் பேரணிக்கும் தடை என்றது காவல்துறை. இது குறித்து நம்மிடம் பேசிய தீபன், இதனால் அவசரம் அவசரமாக கோர்ட்டில் வழக்குப் போட்டு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கினோம். இதனையடுத்து கடலூர் முழுக்க தேசியத் தலைவர் பிரபாகரன் உருவ பேனர்கள் 70 இடங்களில் வைத்தோம். ஆனால், 17-ந்தேதி இரவு இந்த படங்களையெல்லாம் அகற்ற வேண்டும். நீங்கள் எடுக்கலைன்னா நாங்களே எடுத்து விடுவோம்’ என்று மிரட்டியதுடன் பொதுக்கூட்டத்திற்கு தந்த அனுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் போட அனுமதிக்க முடியாது என்று மிரட்டலாகத் தெரிவித்தார்கள். இதனால், கூட்டத்தை கல்யாண மண்டபத்தில் வைக்க வேண்டிய நிலை. பிரபாகரன் படத்தை காவல்துறை அப்புறப்படுத்தியது என்றார். இந்தக் கூட்டத்திற்கு ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை சீமான் அழைத்து வந்திருப்பதால் கடலூரில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே தென்பட்டன. வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணப்பன் எஸ்.பி. அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளைப் போட்டுக்கொண்டே இருந்தார்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டிருந்தனர். கூட்டத்தில் பேசிய சீமான், தலைவர் பிரபாகரன் படத்திற்கு தடையாம். அவரது படத்திற்கு இப்போது தடை போடுகிற ஜெயலலிதாவுக்கு, உங்களுக்காக மைக் பிடித்து வாக்கு சேகரித்தபோது என் பின்னால் பிரபாகரன் படம் இருந்ததே… அப்போது தெரியவில்லையா? இனி பிரபாகரன் படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வெளியே நாம் வரவேண்டும். உடம்பில் பச்சைகுத்திக் கொள்ளுங்கள். பிரபாகரன் படத்திற்கு தடைபோட்டவர்களின் படங்களை பொதுக்கழிப்பிடத்தில் ஆண், பெண் படத்திற்கு பதிலாக மாட்டி வையுங்கள் என்று வீராவேசமாக பேசினார் சீமான்.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கூடியது. 5.30 மணிக்கு வானம் மெல்ல கவியத் தொடங்கிய நிலையில் திடீரென்று வந்த மாணவர் கூட்டமைப்பினர் தமிழீழத்திற்கான ஆதரவு முழக்கங்களை எழுப்பியவாறே திரண்டு வர, அவர்களிடம் உங்களுக்கு அனுமதி இல்லை போய்விடுங்கள்’ என்று போலீஸ் எச்சரிக்கவும், “இதோ போய் விடுகிறோம் சார்’ என்று சொல்லிக்கொண்டே திடீரென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதனால் டென்சன் ஆனது போலீஸ். உடனே அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி ஒரு மண்டபத்தில் அடைத்து விட்டனர். நள்ளிரவில் அவர்களை எச்சரித்து அனுப்பியது போலீஸ். வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தவிருந்த சீர்காழி கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பண்ருட்டி அருகே உள்ள புலியூர் தோட்டத்தில் அஞ்சலி கூட்டத்தை நடத்தினார் வேல்முருகன்.

அதேபோல மயிலாடுதுறையில் பேரணியும் பொதுக் கூட்டத்தையும் நடத்த அனுமதி பெற்றிருந்த உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கும், சோழிங்கநல்லூரில் பொதுக்கூட்டமும் பேரணியும் நடத்தவிருந்த தமிழர் எழுச்சி இயக்கத்திற்கும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் திருமண மண்டபங்களில் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இப்படி தமிழின உணர்வாளர்களின் கூட்டத்திற்கும் பிரபாகரனின் படத்திற்கும் ஜெ. அரசு தடை விதித்துள்ள நிலையில், புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதியிலுள்ள கொத்தமங்கலத்தில் ம.தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கு.ப.கிருஷ்ணன்,

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்துக்கு அஞ்சலி செய்துவிட்டு, இந்த மே 18-ஆம் நாள் உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நாள். இந்த நாளில் உறுதி ஏற்போம். ஒன்றுபடுவோம்” என்றார். கு.ப.கி. இப்படி பேசியது கண்டு அப்பகுதி அ.தி.மு.க.வினர் மத்தியில் திடீர் பரபரப்பு கிளம்பியது. “ஈழத்தாய்’ என்று ஜெயலலிதாவை உணர்வாளர்கள் சிலர் போற்றி மகிழும் நிலையில், ம.தி.மு.க. நடத்திய நிகழ்ச்சி மற்றும் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சி தவிர மற்றவர்கள் நடத்திய மே-18 நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் பிரபாகரன் படத்திற்கும் ஜெ. அரசு தடை விதித்தது குறித்து சிலரிடம் பேசினோம்.

உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ராஜா ஸ்டாலின், மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் எழுச்சி நாள். இந்த நாள் இனிவரும் காலங்களில் தமிழர்களின் எழுச்சி நாளாக மாறும். ஒவ்வொரு வருடமும் அதற்கான வலிமை கூடிக்கொண்டே போகிறது. அதனை தடுக்கும் முகமாகவே இந்த அடக்குமுறையை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அனுமதி மறுப்பு என்பது ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்.

தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் வேலுமணி, தமிழக அரசின் இரட்டை வேடத்தை இது காட்டுகிறது என்றார். இது குறித்து சீமானிடம் பேசியபோது, சட்ட மன்றத்தில் இவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தான் இந்த நினைவேந்தல் கூட்டம் நடக்கவிருந்தது. அதற்கு தடை என்றால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும் தடையா? அ.தி.மு.க. ஆட்சி வந்ததற்குப் பிறகு 3 முறை நினைவேந்தல் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் பிரபாகரன் படத்தை அனுமதித்தீர்களே? வைகோ நடத்துகிற கூட்டத்திற்கு அனுமதி, எங்களைப் போன்றவர்களின் கூட்டத்திற்கு தடை என்றால் உங்களிடம் உள்நோக்கம் இருக்கிறது.

என் மீது வழக்குகள் போட்டிருக்கிறார்கள். சட்டத்தை நான் மீறியிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கட்டும். அதை சந்திக்க தயாராக இருக்கிறான் இந்த சீமான் என்றார் அழுத்தமாக. திருமாவளவனிடம் தடை குறித்து பேசியபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ராஜபக்சவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இப்போது வீரவணக்க அஞ்சலி கூட்டத்திற்கு தடை விதிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈழ ஆதரவு நிலையிலிருந்து தமிழக அரசு விலகிச் செல்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. தாணா தெருவில் ம.தி.மு.க.வுக்கு அனுமதி. எங்களுக்கு மறுப்பு. முதலில் போக்குவரத்தை காரணம் காட்டினார்கள். பிறகு, டெபுடி கமிஷனர் புவனேஷ்வரியிடமிருந்து ஒரு கடிதம். அதில், மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து சட்ட-ஒழுங்கு பிரச்சினை எழுவதால் உங்கள் கூட்டததுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரே நிகழ்ச்சிக்கு இரண்டு தடைகள். காவல்துறையின் செயல்பாட்டில் உள்நோக்கம் இருக்கிறது. ஈழத்தமிழின போராட்டம் குறித்து சின்ன நடவடிக்கையை கடந்த தி.மு.க. அரசு எடுத்தாலும் லபோ திபோ என்று குதித்த தமிழ்த் தேசியவாதிகள் இந்த தடைக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்  என்கிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் நிறுவனர் பேராசிரியர் சுப.வீ.,  மே 17, 18-களில் நம் தமிழ் உறவுகள் பல்லாயிரக் கணக்கானோர் அழிக்கப்பட்டதை நினைவு கூரும் கூட்டங்களை எந்த வன்முறையும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், சென்னையில் நடந்த ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர மற்ற எல்லா கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது இந்த அரசு. ஒருபுறம் ஈழத்தை ஆதரிப்பதாக தீர்மானம், மற்றொரு புறம் கண்ணீர் விட்டு அழுவதற்கும் தடை. இது ஜெயலலிதா அம்மையாரின் இயல்பான இரட்டை முகம்.

தமிழ் வழி கல்வியை மறைத்துவிட்டு தமிழ்த்தாய்க்கு சிலை என்று சொல்லவில்லையா என்ன? மணல் திட்டுகளை அகற்றலாம் என பேசிவிட்டு இராமர் பாலம் புராதன சின்னம் என்று இன்றைக்கு அவர் சொல்லவில்லையா என்ன? இரட்டை வேடங்கள் இந்த அம்மையாருக்கு பழக்கமான ஒன்றுதான். இதனை இனியாவது உணர்வாளர்கள் உணர்வார்கள் என நம்புகிறேன் என்றார். தமிழீழம் குறித்த எழுச்சிகள் தமிழகத்தில் அழுத்தமாக பதிவாவதை மத்திய அரசு விரும்பவில்லை. அதன் ஒரு முயற்சியாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்கிறார்கள் தமிழக காவல்துறையினர்.

Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government

Related posts