சென்னையில் முப்பத்தி ஐந்து ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்

thirty five thousand buildings chennai were constructed illegally

thirty five thousand buildings chennai were constructed illegally
thirty five thousand buildings chennai were constructed illegally

சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எவ்வித அனுமதியின்றி சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் போரூர் மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அக்கட்டிடத்தில் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே கட்டிட விபத்திற்கு இடி விழுந்தது தான் காரணம் என கட்டுமான நிறுவனம் கூறினாலும், ஏரி நிலத்தில் 11 மாடி கட்டியதே முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக இடிந்த கட்டிடத்தில் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்திற்கு நேற்று சீல் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இது போன்று விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டும் எனச் சொல்லப் படுகிறது.

கல்வி மற்றும் தொழிலுக்காக சென்னையை நோக்கி படையெடுத்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.  எனவே, முன்பு ஒரு மாடியுடன் இருந்த இடங்களில் கூட இன்று பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் முளைத்துள்ளன. வாடகை பிரச்சினை காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடு வாங்க நினைப்பதும் இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறலாம்.

சென்னையில் எங்கு கட்டடங்கள் கட்ட வேண்டுமானாலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதியும், 3 மாடி அல்லது 15 மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழும் பெற்ற வேற வேண்டியது கட்டாயமாகும்.

கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு அதன் திட்ட வரைபடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். கட்டடத்தின் வரைப்படத்தை தயார் செய்யும் முன்னர் தீயணைப்புத்துறையிடம் அந்த கட்டடத்தில் செய்யப்பட வேண்டிய விபத்து முன்னெச்சரிக்கை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்காக செய்யப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை பெற வேண்டும்.

கட்டிடம் கட்டப்படும் நோக்கத்தை பொருத்து தீயணைப்புத்துறையின் விதிமுறைகளும், பெருநகர வளர்ச்சி குழுமத்தின் விதிமுறைகளும் வேறுபடுகின்றன. தீயணைப்புத்துறையின் பொதுவான விதிமுறைகளில், கட்டிடத்தின் அருகில் செல்லும் வகையில் சாலை வசதி இருக்க வேண்டும், கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் தீ எச்சரிக்கை கருவிகளும், தீ அணைப்பான் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதேபோல பெருநகர வளர்ச்சி குழுமம் குடியிருப்புகளுக்கு அனுமதி கேட்கப்படும் குடியிருப்பில் மக்களுக்கு ஏற்ப பூங்கா இருக்க வேண்டும், வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும், ஒவ்வொரு வீட்டுக்கும் சிறந்த வகையில் காற்றோட்ட வசதி செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

ஆனால் சென்னையில் சில கட்டடங்கள் தவிர்த்து பெரும்பாலான கட்டடங்கள் தீயணைப்புத்துறையின் அனுமதியின்றியே மக்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், தற்போது கட்டப் பட்டு வரும் கட்டிடங்கள் பலவற்றிலும் முறையான அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் போரூர் கட்டிட விபத்து பெரும்பான்மையான மக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. காரணம் சொந்த வீடு ஆசையில் நிலம் மற்றும் கட்டிட விதிமுறைகள் பற்றி முழுமையான விவரங்களை கேட்டறியாமல் வீடு வாங்கிய மக்கள் தற்போது அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதேபோல், முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் வீடுகளைக் கட்டிய மற்றும் கட்டிக் கொண்டிருப்பவர்கள் தாங்களும் இதே போன்று பிரச்சினையில் சிக்கி விடுவோமோ என குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இது ஒருபுறம் என்றால் கட்டிடத் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. கட்டிடப் பணி முழுவதுமாக நிறைவடையும் வரை அதிலேயே தங்கி யிருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் வேற்று மாநிலம் மற்றும் ஊர்களைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உள்ளனர்.

எனவே, தவறே செய்யாத இந்த ஊழியர்கள் தங்களது அரை ஜாண் வயிற்றுப் பிழைப்பிற்காக உயிரை பணயம் வைத்து வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதுவரை விதிமுறை கட்டடங்கள் மீது பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதே நேரத்தில் தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு விதிமுறையை மீறும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை.

தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பரிந்துரைக் கடிதம் எழுத மட்டுமே அதிகாரம் உள்ளது.   இந்த காரணத்தால் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையிலேயே தீயணைப்புத்துறை உள்ளது. அதேநேரத்தில் பெருநகர வளர்ச்சி குழுமம், விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆர்வம் காட்டாமலேயே உள்ளதாகக் குற்றம் சாட்டப் படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி சென்னையில் சுமார் 33 ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப் பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இந்த எண்ணிக்கை தற்போது நிச்சயம் 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் எனக் கருதப் படுகிறது.  யாரோ சிலரின் பணத்தாசைக்காக சம்பந்தப்படாத அப்பாவிகள் பலர் பலியாகும் நிலைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப் பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது மறுக்க இயலாதது. மீட்புப் பணிகள் மட்டுமல்ல இனி இது போன்ற விபத்துக்கள் ஏற்படாவண்ணம் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அவசரத்தில் மேற்கொள்ளப் பட வேண்டும் என்பது தான் அனைவரது கோரிக்கையும்.

The sources says that over thirty five thousand buildings were constructed without following the CMDA norms.

Related posts