வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் புதிய வரி

new tax for importing electronics

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் டெலிவிஷன்களுக்கு 35 சதவீதம் சுங்கவரியும், அந்த வரியில் 3 சதவீதம் கல்வி வரியாக கூடுதலாக விதிக்கப்படும். மொத்தத்தில் 36.05 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை 26-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியது அவசியமாகிறது என்றார். தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன்களுக்கு எந்த வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

new tax for importing electronics

Related posts