தந்தை – மகன் ரஷியக் கதை: முதல்வர் ஜெ.ஜெயலலிதா.

russian story by j.Jayalalitha

ஸ்ரீரங்கம், 2013 ஜூன்.4 – : தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், அவரது மகன் ஸ்டாலினையும், கடுமையாகச் சாடி, ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில், குட்டிக் கதை கூறி முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி, இவையெல்லாம் வெறும் அறிவிப்புகள் என குதர்க்கமாகத் தெரிவித்தார். அவரது மகன் மு.க. ஸ்டாலின் “இது 110 ஆட்சி’ என்று கூறி “இதில் 50 சதவீதத்தையாவது நிறைவேற்ற முடியுமா?’ எனக் கேட்கிறார். இதில் எதையுமே நிறைவேற்ற முடியாது என்று பொருள்படவும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்.

விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருப்பதால் அதைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி இவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.  இதை நினைக்கும்போது ஒரு ரஷியக் கதைதான் நினைவுக்கு வருகிறது.

பெரிய நினைவு மண்டபம் முன்பு தந்தையும், மகனும் நின்று கொண்டு அந்த வழியாகச் சென்றவர்களிடம், “இது பெரிய மகானின் நினைவு மண்டபம்’ எனக் கூறி உண்டியல் வைத்து சம்பாதிக்கத் தொடங்கினர். பணம் நிறைய சேர்ந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு வந்தது. அப்போது “நாம் சண்டையிட்டுக் கொண்டால் மக்கள் நம்மைத் தவறாக நினைத்துக் கொள்வார்கள். எனவே ஒரு கழுதையும், பணமும் தருகிறேன் பிழைத்துக் கொள்’ எனச் சொல்லி மகனை அனுப்பிவைத்தார் தந்தை.  மகன் செல்லும் வழியில் கழுதை இறந்தது. அந்தக் கழுதையை ஓரிடத்தில் புதைத்துவிட்டு, இருந்த பணத்தில் ஒரு சிறிய மண்டபமும் கட்டினார் மகன். அவ்வழியே சென்றவர்களிடம் “இது பெரிய மகானின் நினைவிடம்’ எனக் கூறி உண்டியல் வைத்தார். பணம் சேர்ந்தது. தந்தையைவிட மகன் பெரிய ஆளாகிவிட்டார். மகனின் வளர்ச்சியை கேள்விப்பட்ட தந்தை மகனை சந்தித்து எப்படி எனக் கேட்டார். இறந்த கழுதையைப் புதைத்து சம்பாதித்த கதையை அவர் கூற, அப்போதுதான் தந்தை பழைய கதையை விளக்கினார். “ஏற்கெனவே அங்கு இருக்கும் மண்டபமும் இப்போது இறந்த கழுதையின் தாயைப் புதைத்த இடம்தான்’ எனச் சொல்லி, “நீதானடா என் பிள்ளை’ எனப் பாராட்டினார் தந்தை.

 இதைப் போலத்தான் இந்த அரசைப் பற்றி, அரசின் திட்டங்களைப் பற்றி கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் மனம் போன போக்கில் அவதூறுகளைப் பேசி வருகின்றனர்’ என்றார் ஜெயலலிதா.

russian story by j.Jayalalitha

Related posts