கைவிடப்பட்ட போரூர் மேம்பாலம்: முதல்வர் கண்படமக்கள் எதிர்ப்பார்ப்பு

porur junction bridge not yet Completed

பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகள்: பலமுறை முதல்வர் இந்த சாலையை கடந்தும் விடிவுகாலம் வரவில்லை போரூர் மேம்பாலத்திற்கு பூந்தமல்லி செல்லும் வழியில் இரண்டு தூண்களோடு முடிந்து விட்டது போரூர் மேம்பால பணிகள். பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்களும் சாலையை கடக்க உயிரையும் பணயம் வைக்கும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. காவல் துறையும் தங்களின் பணிகளை முடிந்தவரை  சிறப்பாக செய்தாலும் நாளுக்குநாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை.

இன்னும் சில தினங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் நிலையில் தண்ணீரும் தேங்கினால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் துயரத்துக்கு உள்ளாவோம் என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர். போரூரில் 4 சாலைகள் சந்திக்கும் சிக்னலில் இருந்து மேற்கே போகும் சாலை பூந்தமல்லிக்கும்தெற்கே போகும் சாலை குன்றத்தூருக்கும் கிழக்கே போகும் சாலை கிண்டிக்கும் வடக்கே போகும்சாலை வட பழனிக்கும் செல்கிறது.இந்த 4 சாலைகளும் சந்திக்கும் இடத்தில் அவற்றை இணைக்கும் மேம்பாலம் வேண்டுமென இப்பகுதி மக்கள், வியாபாரிகள் பலமுறை அரசுக்கு மனு கொடுத்தனர்.

இதையடுத்து 2005ல் இந்த சிக்னலில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் மேம்பாலம் கட்டுவதற்கு அப்போதைய அதிமுக அரசு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கியும் இந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது.  அதன் பின்பு 2006ல் திமுக ஆட்சியில் போரூர் மேம்பாலம் கட்ட திமுக அரசு திட்டம் தயாரித்து ரூபாய் 34 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டது. இந்தப்பணியை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்தது.

டெண்டரில் கூறியபடி 2010 பிப்ரவரி 15ல் பணிகள் தொடங்கி 2011 ஆகஸ்ட் 14ல் முடிவடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி பணி நடக்கவில்லை. பூந்தமல்லி செல்லும் சாலை 3 வழியாக ஆக்கப்பட்டது. பின்னர் அந்த தனியார் நிறுவனம் சாலைகளை அகலப்படுத்தவில்லை என்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றிக் கொடுக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே குடிநீர் வடிகால் வாரியத்தால் பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறையினருக்கு எதிராக பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு விரைந்து பணிகளை முடிக்க குறுகிய கால இடைவெளியில், வியாபாரிகளுக்கு போதிய கால அவகாசம் தராமல் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், சாலைகள் அகலப்படுத்த இடையூறாக இருந்த கட்டிடங் களையெல்லாம் இடித்து தள்ளியது. இப்படி கோடிக்கணக்கான மதிப்புள்ள கடைகள், வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன.

இந்நிலையில் போரூர் 4 வழிச்சாலை சந்திப்பில் இருந்து கிண்டி செல்லும் சாலையின் நடுவில் பதிக்கப்பட்டுள்ள 1,600 மீட்டர் நீளமுள்ள குடிநீர் குழாய்களை குடிநீர் வடிகால் வாரியம் அகற்றி மாற்றி அமைத்தாலே பணியைத் தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் நெடுஞ்சாலைத்துறை குடிநீர் வாரியத்துக்கு ருபாய் 5 கோடியே 53 லட்சத்தை வழங்கியது. ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட குடிநீர் வடிகால் வாரியம், 2 ஆண்டாகியும் சாலை நடுவில் அமைத்துள்ள குடிநீர் குழாய்களை அகற்றாததால் பணிகள் நடக்கவில்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினரால் கட்டப்பட வேண்டிய மேம்பாலப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சிக்னலை கடக்க  அரைமணி நேரத்துக்கு மேலாகிறது.

இதனால் 4 சாலைகளிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இந்தப்பகுதியில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவமனை, மியாட் மருத் துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் சிக்னலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை அரசு தீவிரப்படுத்தவேண்டும் என்று இப்பகுதி மக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் பார்வைக்கும்  இந்த செய்தியினை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்  அம்மாவின் கண்பட்டால் போரூர் மேம்பாலம் ஒளி பெரும் என போரூர் வாசிகள் காத்து இருக்கின்றனர்.

porur junction bridge not yet Completed

 

 

Related posts