மோடியின் அடுத்த கட்ட வியுகம்: பா.ஜ.க. வின் தொகுதிகள் முதல் குறி

பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை நியமனம் செய்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இந்திய அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் மோடி அடுத்த வியுகம் வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

முதல் கூட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை பட்டியலிட்டு வைத்திருக்கும் அவர், மஹாராஜ் கஞ்ச், டியோரியா, கோராக்பூர், குஷி நகர், வாரணாசி, பால்லியா, துமாரிகஞ்ச், பஹ்ரியாச், சுல்தான்பூர், லகிம்பூர், தவுர்ஹரா, லக்னோ உன்னாவ், கான்பூர், காசியாபாத், மீரட், ஆக்ரா உள்ளிட்ட 42 தொகுதிகளை சூறாவளி பிரசாரம் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்.

1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 57 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது.

2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தலில் வெறும் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பா.ஜ.க., வரும் 2014 தேர்தலில் 1998ம் ஆண்டு நிகழ்த்திய சாதனையை முறியடிக்கும் என மாநில பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Related posts