கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது

நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சை போன்றவற்றிற்கான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கூடிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளோம்.

இத்திட்டத்தின்படி பிரசவத்துக்கு முன் 7 முதல் 9 மாதங்கள் வரை அவர்களின் சிகிச்சை, நோய் அறிகுறிகளை அறிதல், மற்றும் போக்குவரத்து உணவு ஆகியவற்றுக்கான செலவுகளையும் மேலும் குழந்தை பிறந்த ஒராண்டு வரை நோய் ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்திரா காந்தி மாத்ருத்வ சஹயோக் யோஜனா திட்டத்தின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின்போது மட்டுமே பயன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அத்திட்டத்தை மேலும் தரம் உயர்த்த உள்ளோம். அதன்படி திருமணமான பெண்கள் கர்ப்பம் தரித்ததில் இருந்து பிரசவ காலம் வரை பயன்களைப் பெற முடியும்.

கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலத்தில் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுவதோடு வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து உதவிகளையும் பெற முடியும். அவர்களின் அனைத்து செலவுகளையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும்.

ஜம்மு காஷ்மீரில் தொலைதூரப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு மேலும் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வதற்காக 600 புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் இத்திட்டமானது நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மத்தியில் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

 

ghulam nabi azad latest news

Related posts