தில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல்வர்கள் மாநாடு

உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறை சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதல்வர்களின் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (2013ஏப்ரல் 15) நடைபெறுகிறது.

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல்வர்கள் மாநாடு

இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அதையடுத்து, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த ஆலோசனையை திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் சார்பில்… இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மாநில சட்ட அமைச்சர் கே.பி. முனுசாமி, உள்துறைச் செயலர் ஆர். ராஜகோபால், தமிழ்நாடு டிஜிபி கே. ராமானுஜம் ஆகியோர் பங்கேற்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கடந்த மாதம் கூறப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks: Dinamani

Related posts