நான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்

“”மற்றவர்களைப்போல நானும் சாதரண மனிதன் தான். கிரிக்கெட் கடவுள் அல்ல,” என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் “மாஸ்டர்’ பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச அளவில் சதத்தில் சதம் அடித்து சாதித்தார். இவரை, இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் கடவுளாக பார்க்கின்றனர்.
இது குறித்து சச்சின் கூறியது:நான் கிரிக்கெட்டின் கடவுள் இல்லை. கடவுள் எப்போதும் தவறுகள் செய்யாதவர். போட்டிகளில் மற்ற வீரர்களைபோல நானும் தவறுகள் செய்கிறேன். இந்திய வீரர் கவாஸ்கரைப்போல் ஆக வேண்டும் என்பது எனது குழந்தை பருவ கனவு. பின் வளர்ந்துவரும் காலங்களில் நான் மிகவும் ரசித்தவர் ரிச்சர்ட்ஸ். அவரின் ஆட்டத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதனால் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் கலந்த கலவையாக நான் உருவெடுக்க விரும்பினேன்.
எனது 100வது சதத்தை எட்டிய போது குதித்து ஆரவாரம் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இல்லை. மாறாக இதை எட்ட ஏன் எனக்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டது என்ற கேள்வி மட்டுமே இருந்தது. கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பாத்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தை நான் இத்தனை நாட்கள் தாமதித்து விட்டேனோ என தோன்றியது.
கடந்த 2011 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடிக்க (85 ரன்கள்) முயற்சி செய்தேன், ஆனால் அப்போது மக்களின் கவனம் முழுவதும் உலக கோப்பை வெல்வதில் இருந்ததால், 100வது சதத்தை பற்றிய பேச்சே இல்லை. பள்ளிப்பருவத்தில் படிப்பு, கிரிக்கெட் என இரண்டிலும் சாதிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதை போகப் போக புரிந்து கொண்டேன். கிரிக்கெட் என்னை தூங்க விடாமல் செய்தது.
ஒரு கட்டத்தில் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் பேட்டை வைத்திருந்தேன். முதல் 20 நிமிடத்தில் டென்னிஸ் விளையாடினேன், அடுத்த 20 நிமிடத்தில் கிரிக்கெட் விளையாடினேன். டென்னிஸ் விளையாட்டை ரசித்து விளையாடினேன். ஆனால் கிரிக்கெட் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை மாற்றியது அந்த 20 நிமிடங்கள் தான். இந்திய அணியின் “ஜெர்சி’ கிடைத்த முதல்நாள், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இத்தனை ஆண்டுகள் பல தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று வருவது எனக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு சச்சின் கூறினார்.

Related posts